சென்னை: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் விபரீத முடிவு... கண்ணீரில் குடும்பம்!
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. பல்வேறு தரப்பினர் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தொடர் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இன்னமும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் சென்னையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இளைஞர் இழந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை, ஆரோக்கிய மாதா நகர், இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு முடித்துவிட்டு அவ்வப்போது கேட்டரிங் தொடர்பான வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது தந்தை தேவராஜ் கிரி கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தாய் மோத்தி மற்றும் அண்ணனுடன் வசித்து வந்தவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவரது அம்மா மோதேதி மார்பக புற்றுநோயால் பாதிகப்பட்டு 4-வது ஸ்டேஜில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை பழக்கமாக கொண்ட ஆகாஷ் நேற்று தாயின் சிகிச்சை செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் அவரது தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் ஆகாஷை கடிந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாயின் சிகிச்சை செலவுக்கு வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் மன உளைச்சலில் இருந்த ஆகாஷ் நேற்று மாலை முதல் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆகாஷின் தாயும் அண்ணனும் தேடி வந்துள்ளனர். இரவும் காணாததால் அதிகாலை 3:30 மணி அளவில் ஆகாஷின் அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து தகவலின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வழக்கு பதிவு செய்து ஆகாஷின் உடலை உடற்கிராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆகாஷின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆகாஷின் தாய். "26 ஆண்டுகளாக பத்திரமாக வளர்த்து வந்த பிள்ளை தற்போது இல்லாமல் போய்விட்டான். எனக்கு சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இறந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்தான். இன்னும் இந்த ஆன்லைன் ரம்மி பல உயிர்களை காவு வாங்குவதற்கு முன் அதை தடை செய்ய வேண்டும்.
ஆன்லைன் ரம்மியால் நிறைய உயிரிழப்புகள் தொடர்பான செய்தி வரும் போது கடந்து போய் விடுகிறோம். ஆனால், அது நமது குடும்பத்தில் நடக்கும் போதுதான் எவ்வளவு கொடுமை என அறிகிறோம். அடுத்த உயிரிழப்பு நடப்பதற்கு முன்பாக அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.