சென்னை: அறுபட்ட பெண்ணின் நாக்கு - ஐஸ்கிரீமில் இருந்தது கண்ணாடித் துண்டா.. ஐஸ்கட்டியா? நடந்தது என்ன?
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி கவுசல்யா (31), நேற்றிரவு பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள (காப்பர் கிச்சன்) என்ற தனியார் உணவகத்தில் உணவு உண்டுள்ளார். இறுதியாக பஃலூடா வகை ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அப்போது திடீரென கண்ணாடித் துண்டு போல் ஒன்று வாயில் சிக்கி நாக்கு அறுபட்டுள்ளது. இது குறித்து உணவகத்தில் முறையிட்ட போது அவர்கள் முறையாக விளக்கம் அளிக்காமல் அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு கிடைத்த மருத்துவமனை தகவலின் அடிப்படையில், ஐஸ்கிரீமில் இருந்த கண்ணாடித் துண்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக உணவக மேலாளரிடம் விளக்கம் கேட்டபோது, ஐஸ்கிரீமில் இருந்தது கண்ணாடித் துண்டு அல்ல, ஐஸ்கட்டி அதனை கடித்ததால் நாக்கில் லேசான கீறல் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். ஆனால் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை பணம் கேட்டு பேரம் பேசினர். அதனை கொடுக்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.