சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர் என்கவுன்டர் ஏன் - காவல் ஆணையர் அருண் விளக்கம்
செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
1 மணி நேரத்தில் 6 இடங்களில் நகைகளை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்:
"நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை சைதாப்பேட்டையில் தொடங்கி கிண்டி வரை 6 இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. உடனடியாக சென்னை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியிலும் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில் வெளிமாநில கொள்ளையர்கள் தான் என்பது தெரியவந்தது. விமான நிலையம், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
சிசிடிவி காட்சிகளால் சிக்கிய கொள்ளையர்கள் தப்ப முயன்றது எப்படி?
மேலும் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து விமானம் மூலம் தப்ப முயன்ற 2 கொள்ளையர்களை, விமான நிலைய காவல் ஆய்வாளர் பாண்டி நேரில் சென்று கைது செய்தார். அவசரமாக கடைசி நேரத்தில் ஐதராபாத்திற்குச் செல்லும் விமானத்திற்கு, கைதான 2 பேரும் டிக்கெட் கேட்டதாகவும் அதில் ஒருவர் டிக்கெட் வாங்கிச் சென்றதாகவும் மற்றொரு நபரின் அடையாள அட்டை சரியாக இல்லாத காரணத்தினால் டிக்கெட் வழங்கவில்லை. ஐதராபாத் விமானம் புறப்படத் தயார் நிலையில் இருந்த போது விமான கட்டுப்பாட்டு அறைக்கு உரிய முறையில் தகவல் கொடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்துள்ளோம்.
நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்?
மேலும் ஒரு கொள்ளையனை ஓங்கோல் பகுதியில் வைத்து ரயிலில் செல்லும் போது கைது செய்தோம். சிசிடிவி காட்சியை வைத்து தான் அடையாளம் கண்டோம். கொள்ளையர்கள் உடையை மாற்றிக் கொண்டனர். ஆனால், அதே ஷூவை அணிந்து இருந்தனர். அதனை வைத்து அடையாளம் கண்டோம். 3 பேரும் இராணி கொள்ளையர்கள். மும்பையில் வசிப்பவர்கள். நகை பறிப்பதை வழக்கமாகக் கொண்டனர். கைதானவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக் கர்நாடகா மாநில பதிவு எண்ணை கொண்டது. திருட்டு பைக்கா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.
26 சவரன் தங்க நகைகள் முழுமையாக பறிமுதல்:
இந்த கொள்ளையர்களில் ஒருவர் ஏற்கனவே சென்னைக்கு வந்து நோட்டமிட்டு சென்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளையடித்த நகைகளை 3 கொள்ளையர்களும் பிரித்து எடுத்துச் சென்றனர். வழிப்பறி செய்யப்பட்ட 26 சவரன் தங்க நகைகள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நகை பறிப்பில் 65 வயது மூதாட்டி கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இந்தாண்டு இதுவரை 7 நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அதனை முழுமையாக கண்டுபிடித்து விட்டோம். அதில் ஈடுபட்டவர்கள் சென்னை குற்றவாளிகள் தான்.
என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்?
நகை பறிப்பு குற்றங்கள் என்று கண்டுபிடிக்கப்படாமல் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு நகை பறிப்பு சம்பவங்கள் 34 நிகழ்ந்துள்ளது. அதில் 33 வழக்குகளில் கைது நடவடிக்கை எடுத்து விட்டோம். ஜாபர் என்கவுண்டர் செய்யப்பட்ட போது போலீசுக்கு யாருக்கும் காயமில்லை. அவர் பீகார் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தார். போலீசின் வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டப்பிறகே என்கவுன்டர் நிகழ்ந்தது. 2 ரவுண்டு கொள்ளையன் ஜாபர் சுடுகிறான். போலீஸ் ஒரு ரவுண்டு தான் சுட்டார்கள். இராணி கொள்ளையர்கள் வசிக்கும் அம்பிவேலி பகுதிக்குள் செல்வதே கடினம்.
மகாராஷ்டிரா போலீசால் தேடப்படும் நபர்கள். 20 பேர் கொண்ட கும்பல் இருக்கிறார்கள். இந்த கும்பலில் 3 வது நபராக ஜாபர் இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசாரிடம் தெரிவித்துள்ளோம். கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்துக் கொண்டு தான் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.