சென்னை: குதிரையின் வாலைப் பிடித்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை குதிரை உதைத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர், பம்மல் 30-வது தெருவில் வசித்து வருபவர் டில்லிராஜ் (39), என்பவரது மகன் கௌதம் கிருஷ்ணா (4), வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மேய்ச்சலில் இருந்த குதிரையின் வாலை பிடித்து சிறுவன் விளையாடியுள்ளார்.
அப்போது குதிரை சிறுவனின் மார்பில் எட்டி உதைத்துள்ளது. இதில் வலியால் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சங்கர் நகர் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குதிரையின் உரிமையாளர்கள் யார், என விசாரித்து வருகின்றனர்.