சென்னை வன்முறை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மாணவர் போராட்டத்திற்குப் பின்னரான வன்முறை தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினாவில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்தக் கூடாது என்று பாவேந்தன், செந்தில்குமார் ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். போராட்டம் முடிந்த நிலையில் வழக்கினை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. அமைதிவழியில் போராட்டம் நடத்துவோர் மீது ஒருபோதும் பலப் பிரயோகம் நடத்தப்படாது என்று தமிழக அரசு உறுதிமொழி அளித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மெரினா போராட்டத்தின் இறுதியில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாத் முறையிட்டார். போராட்டக்காரர்களுக்கு உதவி செய்த ஒரே காரணத்திற்காக அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருமூர்த்தி என்ற வழக்கறிஞர் முறையிட்டார்.
வன்முறையில் காயமடைந்தோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை காவல்துறையினர் தடுப்பதாகவும், அவர்கள் தகுந்த சிகிச்சை பெற வசதியாக சிறப்பு மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுரேஷ் முறையிட்டார். அவர்களது கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி மகாதேவன், அதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.