சென்னை | காதலிக்க மறுத்ததாக இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டல் - இருவர் கைது
சென்னையில் காதலிக்க மறுத்ததாகக் கூறி இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பாரிமுனை பகுதியில் உள்ள தனியார் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு இளம்பெண் பணி முடிந்து வால்டாக்ஸ் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அந்த இளைஞர்களில் ஒருவர், "என்னை காதலிக்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்" எனக்கூறி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து இளம்பெண் மீது ஊற்றியுள்ளனர். பின்னர், உயிரோடு எரிக்கப்போவதாக கூறி மிரட்டியுள்ளனர். இதனால், அந்த இளம்பெண் கூச்சலிட்டு அழுதுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வருவதற்குள் அந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், பொதுமக்கள் இளம்பெண் மீது தண்ணீரை ஊற்றி பத்திரமாக மீட்டனர். பயத்தில் உறைந்த அந்தப் இளம்பெண் யானைகவுனி காவல் நிலையம் சென்று இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு, இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த வால்டாக்ஸ் சாலையை பகுதியைச் சேர்ந்த அர்ஜூன்(22) மற்றும் அவரது நண்பர் ஜேம்ஸ்(23) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அர்ஜுன் இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததும், அந்த பெண்ணிடம் தனது காதலை சொல்லியும் அவர் ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் பெண் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து யானைக்கவுனி போலீசார் 2 பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளம்பெண் ஒருவரை கூட்ட நெரிசல் மிகுந்த சாலையின் நடுவே இளைஞர்கள் இருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய துணிந்த சம்பவம் சென்னையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.