சென்னை: பகுதி நேர வேலைக்குச் சென்ற 2 மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு
சென்னை போரூர் மேம்பாலம் அருகே பைக்கில் சென்ற இரு மாணவர்கள் நிலை தடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதி விழுந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் தேவா (18). காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வீரா என்பவரின் மகன் தினேஷ் (17). நண்பர்களான இருவரும், அய்யப்பன் தாங்கலில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இருவரும் போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில் இருவரும் ஒரே பைக்கில் வேலைக்கு சென்றுள்ளனர். தேவா பைக்கை ஓட்டிவந்துள்ளார். தினேஷ் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். போரூர் மேம்பாலம் அருகே பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

