சாலை விதிமீறல் அபராதத் தொகைகள் உயர்வு - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள புதிய அபராதத் தொகை சென்னையில் அமல்படுத்தப்படுகிறது. அபராதம் குறைவாக உள்ளதால் விதிமீறலில் ஈடுபடுவோர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. புதிய அபராதத் தொகையின் படி, சாலைகளில் அதிவேகமாக சென்று பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும், பர்மிட் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதம் கட்ட வேண்டும். இருசக்கர வாகனத்தில் அதிக நபர்கள் சென்றால் ரூ.2 ஆயிரம் அபராதமும், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பும் செய்யப்படும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதிழப்பும் விதிக்கப்படும். காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் பிடித்தம் செய்யப்படும்.
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னரும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுகிறது. சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுதலுக்கான அபராதமும் ரூ.500 ஆக உயர்கிறது.