சென்னை: பிரியாணி கடை ஊழியரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி கொள்ளை
சென்னை வியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து ரூ. 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மண்ணடியை தலைமையிடமாகக் கொண்டு சென்னை நகரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனையான பணத்தை ஊழியர் சுரேந்திரன் என்பவர் வசூல் செய்து சென்னை மண்ணடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தினமும் கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று வசூல் செய்த பணம் 10 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சுரேந்திரன் இருசக்கர வாகனத்தில் மண்ணடி நோக்கி சென்று கொண்டிருந்தார். வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் சுரேந்திரனை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்றது.
இதுதொடர்பாக அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் 10 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

