சென்னையில் வெயில் சுட்டெரிக்குமாம்..! கடும் எச்சரிக்கை..!
சென்னையில் வரும் 28-ம் தேதி வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடைக் காலத்தை எதிர்கொள்ள மக்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வரும் 28-ம் தேதி முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
“ தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை காலை மிதமான மழை பெய்யும். இந்த மழை ஒருநாள் மட்டுமே இருக்கும். வழக்கமாக 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் சென்னையில் நேற்று 33 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவானது.
ஆனால், வரும் 28 மற்றும் 29-ம் தேதி முதல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் அழுத்தம் காரணமாக, நிலத்தில் இருந்து வீசும் காற்று வலுப்பெறும். இதனால் சென்னையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும். இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை கடந்து செல்லும் அளவுக்கு வெயில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.