
சென்னையில் இருந்து டெல்லிக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு 0430 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் சரியாக காலை 10.05 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகள் தங்களது வழக்கமான சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகும் விமானத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ஆனால், விமானத்தில் அவர்கள் ஏற்றப்படவில்லை. இதையடுத்து பயணிகள் சிலர் விமான நிறுவன ஊழியர்களிடம் விமான தாமதம் குறித்து கேட்டதற்கு ஏர் இந்தியா நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்பட வேண்டிய ஐந்து நிமிடத்திற்கு முன்னர் விமானம் புறப்பட தாமதமாகலாம் அல்லது முழுமையாக ரத்து செய்யப்படலாம் என ஏர் இந்தியா நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் பயணம் செய்ய வேண்டியவர்களில் சிலர் டெல்லி சென்று வேறு விமானத்தை பிடிக்க இருந்ததால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.