சென்னை: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வளசரவக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ரபீக் (37). தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை செய்து வரும் இவர், நேற்றிரவு தனது நண்பருடன் வானகரத்தில் இருந்து மவுண்ட் - பூந்தமல்லி சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்ததால் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி பார்த்துள்ளார்.
அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பதறிப்போனவர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பக்கம் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து ராயலா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தபோது உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.