சென்னை: காவல்துறை கைப்பற்றிய கஞ்சாவை எலி சாப்பிட்டதால், கைதான இருவரை விடுவித்த நீதிமன்றம்!

சென்னையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்த அளவைவிட நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அளவானது குறைவாக இருந்ததால் இருவரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வர ராவ் எனும் இருவரை, மெரினா போலீசார் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மெரினா போலீசார், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த கஞ்சாவில் 100 கிராம் கஞ்சாவை எடுத்து 50 கிராம் நீதிமன்றத்திற்கும், 50 கிராம் சோதனை செய்வதற்காக ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் வைத்திருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்குப் பதிலாக குறைவான அளவில் கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்ததால், குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது

ஏற்கனவே இதேபோன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே அந்த வழக்கில் போலீசார் சமர்ப்பித்தனர். மீதமுள்ள கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com