கட்டடம் எரிந்தாலும் சம்பளத்தைக் கொடுத்தது சென்னை சில்க்ஸ்!
சென்னை சில்க்ஸ் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. கட்டடம் எரிந்த சென்னை கிளையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் மற்ற கிளைகளில் பணியாற்றலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு, சென்னை தி.நகர், வேளச்சேரி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், கரூர், கொச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம், ஓசூர், விழுப்புரம், ஈரோடு மற்றும் சித்தூர் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.
கடந்த 31-ம் தேதி, சென்னை உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள், மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் கட்டிடம் முக்கால்வாசி இடிந்து நாசமானது. இதில் ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாகக் கூறப்பட்டுள்ளது. சேதமடைந்த மீதமுள்ள கட்டடம் இன்று இடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதில் பணியாற்றிய சுமார் 1300 பணியாளர்களின் சம்பளம் கேள்விக்குறியானது. இப்போது பள்ளி திறக்கும் மாதம் என்பதால் ஸ்கூல் பீஸ் உள்ளிட்ட விஷயங்களுக்கு ஊழியர்கள் சம்பளத்தையே நம்பி இருந்தனர். கட்டடம் தீ பிடித்து எரிந்ததால், ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில், தி சென்னை சில்க்ஸ் தி.நகர் கிளையில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் நிர்வாகம் நேற்று சம்பளத்தை வழங்கியுள்ளது. அவர்களின் வங்கி கணக்கில் சம்பள பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை தி.நகரில் பனியாற்றிய ஊழியர்கள், பிரச்னை முடியும் வரை மற்ற கிளைகளில் பணியாற்றலாம் என சென்னை சில்க்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

