சென்னை ஸ்கேன் சென்ட்டரில் கருக்கலைப்பு? அதிர்ச்சி தகவல்

சென்னை ஸ்கேன் சென்ட்டரில் கருக்கலைப்பு? அதிர்ச்சி தகவல்

சென்னை ஸ்கேன் சென்ட்டரில் கருக்கலைப்பு? அதிர்ச்சி தகவல்
Published on

சென்னையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்ட்டரில் பெண் சிசுக் கொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருவில் இருக்கும் பிஞ்சு உயிர்களை பாதுகாக்க மருத்துவ சேவை வழங்கப்படும் இடத்தில், 100-க்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் நடந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த செயல் தலைநகர் சென்னையில் பல ஆண்டுகளாக நடந்து வந்திருப்பது தான் பேரதிர்ச்சி. வேளச்சேரியில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்ட்டர் ஒன்றில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படுவதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுகாதாரத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ஆதாரப்பூர்வமாக அதனை உறுதி செய்து கொள்ள நினைத்த அதிகாரிகள் ஒரு ரகசிய நடவடிக்கைக்கு திட்டமிட்டனர். அதன்படி, கர்ப்பிணி ஒருவர் அந்த ஸ்கேன் சென்ட்டருக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மையத்தின் உரிமையாளரும், மருத்துவப் பரிசோதகருமான சிவசங்கரனுக்கு, பரிசோதனைக்‌கு வந்‌த பெண் ஒரு உளவாளி என்பது தெரியவில்லை.

வழக்கம்போல் அவருக்கு பரிசோதனை செய்த சிவசங்கரன், பெண்ணின் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்ற தகவலைச் சொல்லி அதிர வைத்துள்ளார். அந்த தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து, அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் அந்த ஸ்கேன் சென்ட்டரே மற்றொரு மருத்துவரின் பெயரில் செயல்பட்டு வருவதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். எவ்வித மருத்துப் படிப்பும் படிக்காமல், சிவசங்கரன் கர்ப்பிணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலினத் தேர்வு தடுப்புச் சட்டம் 1994-இன் படி, கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிவிப்பது குற்றம். ஆனால் அதை பல ஆண்டுகளாக செய்து வந்த சிவசங்கரன், கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் அதை கலை‌க்கவும் உதவி செய்திருப்பதாக கூறி அதிர்ச்சியளிக்கிறார்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள்.

100-க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் அவரால் கலைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறும் தகவல், கேட்பவர்களை பதற வைக்கின்றது. இதுகுறித்த புகாரில் விசாரணையை காவல்துறை துரிதப்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்கேன் சென்ட்டரில் உள்ள கணினி உள்ளிட்ட இயந்திரங்களை கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது சுகாதாரத்துறை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com