விசில் சத்தத்திற்கு ஓடோடி வரும் மான்கள்.. அப்படி என்ன செய்கிறார் சைதாப்பேட்டை சுதாகர்..!
சென்னை சைதாப்பேட்டை அருகே சுற்றித் திரியும் மான்களுக்கு நாள் தவறாமல் உணவளித்து வருகிறார், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்.
சென்னையைச் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் அங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கோல்ஃப்
மைதானத்திற்கு அருகே மான்கள் உணவு தேடி சுற்றித் திரியும் காட்சியைக் கண்ட சுதாகருக்கு மனவேதனை ஏற்பட்டுள்ளது. என்ன செய்யலாம் என யோசித்த அவர், பராமரிக்க ஆட்கள் இல்லாமல் தவிக்கும் மான்களுக்கு தினமும் உணவு கொடுத்தால் என்ன..? என சிந்தித்துள்ளார். அதன்படி, தினமும் காய்கறி, பழங்கள், பிஸ்கட் உள்ளிட்டவற்றை பை நிறைய வாங்கிக் கொள்ளும் சுதாகர், மாலை 4 மணிக்கெல்லாம் மான்களைக் காண மைதானத்தில் ஆஜராகிவிடுவாராம்.
அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், புதர்களில் மறைந்திருக்கும் மான்கள், சுதாகரின் விசில் சத்தத்தைக் கேட்டவுடன் எவ்வித அச்சமும் வெளியே வந்து விடுகின்றன. கூலித் தொழில் செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், மான்களுக்கு உணவு வாங்க நாள்தோறும் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்வதாக கூறுகிறார், சுதாகர்.
கொட்டும் மழையோ, கொளுத்தும் வெளியோ, எத்தனை சவாலான சூழ்நிலையானாலும், கடந்த 3 ஆண்டுகளாக மான்களுக்கு உணவும், தண்ணீரும் வைப்பதைப் மட்டும் சுதாகர் நிறுத்தவில்லை. மான்களின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டிக் கொடுத்து, வாழ்நாள் முழுவதும் அவற்றை பிள்ளைகளைப் போல் பராமரிக்க வேண்டுமென்பதே சுதகாரின் விருப்பமாக இருக்கிறது.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற முண்டாசு கவியின் பாடலுக்கிணங்க, பிற உயிர்களிடத்தில் அன்பு செய்யும் சுதாகர் போன்றோர், அந்த அன்பின்
இலக்கணமாய் வாழ்கிறார்கள்.