5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்

5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்

5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்
Published on

சென்னையில் 44 வருடமாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் இயற்கை எய்தினார்.

சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள கொடைப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர். தனது ஊரில் மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் பலர் உயிரிழந்ததே அதற்கு காரணமாக அமைந்தது. இதனால் தான் ஒரு மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஜெயச்சந்திரன் ஆழ்மனதில் ஏற்பட்டுள்ளது. எண்ணம் போலவே பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் மருத்துவரானார் அவர்.

மருத்துவராகி கடந்த 1971ஆம் ஆண்டு அவர் தொடங்கிய சேவை அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்துள்ளது. ஆரம்பக் காலத்தில் வெறும் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆனால் தன்னிடம் வரும் எந்த நோயாளியிடமும் அவர் கட்டாயமாக காசு கேட்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் ரூ.2 கொடுக்கலாம் என்றபடியே மருத்துவ சேவையை செய்து வந்துள்ளார். ரூ.2 கட்டணமாக பெற்றாலும், எந்தவிதக் குறையுமின்றி ஒரு சிறப்பான மருத்துவத்தையே மக்களுக்கு அளித்து வந்துள்ளார். 44 வருடமாக தொடர்ந்த இவரது சேவை இறுதிக்காலம் வரையிலும் எந்தவித தொய்வுமின்றி நடந்துள்ளது. அதிலும், 24 மணி நேரமும் அவரது கிளினிக் திறந்திருந்துள்ளது. பின் காலத்தில் இவர் தனது கட்டணத்தை வெறும் 3 ரூபாய் உயர்த்தி ரூ.5 ஆக மாற்றினார்.

இவரிடம் சிகிச்சை பெரும்பாலான மக்கள் அடித்தட்டு வர்க்கம்தான். ஆனால் அதேசமயம் கைராசியான டாக்டர் என்பதால் வசதி படைத்தவர்கள் பலரும் இவரிடம் தொடர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்கள் விருப்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாயை கட்டணமாக கொடுத்தால், அதை பணமாக வாங்கிக்கொள்ளாமல் மருந்துகளாக வாங்கிக்கொடுக்கச் சொல்லி அவற்றையும் ஏழைகளுக்கே வழங்கியுள்ளார் ஜெயச்சந்திரன். இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு சேவை ஆற்றுவதிலேயே கழித்துவிட்டார். இவர் இந்த அளவிற்கு மக்களுக்கு சேவை செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி வேணி. ஏனென்றால் அவரும் மருத்துவர் தான். அவரது வருமானத்தில் குடும்பம் நடைபெற, இவர் மக்களுக்கு சேவை செய்வதை தொடர்ந்துள்ளார். இந்த சேவைத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். அவர்களும் மருத்துவர்களே.

இவரது சேவை மற்றும் அன்பால் ராயபுரம் மக்களே இவரது பாச வலையில் விழுந்துவிட்டனர். அவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களே இவர் மீது மிக்க மரியாதையும் செலுத்தி வந்துள்ளனர். இவர் தனது வாழ்நாளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவில் இருந்த இவர், இன்று இயற்கை எய்தியுள்ளார். ஜெயச்சந்திரனின் மருத்துவ சேவையையும், அன்பையும் பெற்றுவந்த ஏழை (ராயபுரம்) மக்கள் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளனர். இவரது வாழ்வை சித்தரித்தே விஜய் நடித்த ‘மெர்சல்’ 5 ரூபாய் டாக்டர் என்ற கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com