சீன அதிபர் வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சீன அதிபர் வருகையையொட்டி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சீன அதிபர் மற்றும் பிரதமர் வருகையையொட்டி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜி.எஸ்டி. சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது. எனவே, மேற்கண்ட சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன் ஏற்பாடுகளை செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட சாலைகளில் 11, 12 தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சக வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11ல் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஒ.எம்.ஆர். சாலையில் வரும் வாகனங்கள் சோழிங்க நல்லூர் சந்திப்பில் திருப்பிவிடப்படும். தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம். 11 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரை பெரும்பாக்கம் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.
பிற்பகல் 3.30 மணிமுதல் 4.30 மணி வரை 100 அடி சாலை வழியாக செல்ல வாகனங்கள் திருப்பிவிடப்படும். ராஜீவ் காந்தி சாலையில் (ஒஎம்.ஆர்) நகருக்குள் வரும் வாகனங்கள் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக செல்லலாம். தேசிய விருந்தினர்களின் சென்னை வருகை சிறப்பாக அமைய பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.