சென்னை: மோடி வருகைக்கு எதிர்ப்பு – போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்ய முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Congress protest
Congress protestpt desk

செய்தியாளர்: வண்ணை ரமேஷ்குமார்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில மாவட்ட தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அவருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்தும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் தொடர்ந்து மோடிக்கு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து வீட்டு காவலிலும் போலீசார் வைக்கின்றனர்.

Congress protest
Congress protestpt desk

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் பயணமாக இன்று சென்னைக்கு வருகிறார், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் அருகே வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லிபாபு தலைமையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த போலீசார், எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு டில்லி பாபுவை வீட்டுக் காவலில் வைத்தனர்.

இதையறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள், இன்று காலை டில்லிபாபு வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முயற்சி செய்தனர். அப்போது எம்.கே.பி நகர் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து டில்லி பாபு தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com