அவதூறுகளால் பத்திரிகையாளர்களை முடக்கிவிட முடியாது: பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
சேகர் ரெட்டியிடம் இருந்து மூத்த பத்திரிகையாளர்கள் லஞ்சம் பெற்றதாக வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவதூறுகளால் பத்திரிகையாளர்களை ஒரு நாளும் முடக்கி விட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அதிமுக அமைச்சர்கள் சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்றதற்கு ஆதாரமாக அவரது டைரி கிடைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் போலியாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இருப்பதாக கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவதூறுகளால் பத்திரிகையாளர்களை ஒரு நாளும் முடக்கி விட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் செயல் அரங்கேறி வருவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என புதுச்சேரி மாநில செய்தியாளர்கள் சங்கமும் கண்டித்துள்ளது.