சென்னை: சாலையில் கிடந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு விருந்தளித்த காவல் ஆய்வாளர்
சாலையில் கிடந்த செல்போனை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் விருந்தளித்து பாராட்டினார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலா (56). இவர், கடந்த 20-ம் தேதி மாலை வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்போன் ஒன்று சாலையில் கிடந்துள்ளது. அதை எடுத்து பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி, ஐஎம்இஐ நம்பரை வைத்து அந்த செல்போனை தவறவிட்டது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பதை கண்டறிந்தார். இதையடுத்து, அவருடைய செல்போன் தான் என்பதற்கான ஆவணங்களை காவல் நிலையத்தில் காண்பித்த பிறகு வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார் செல்போனை கண்ணனிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்த கமலாவை பாராட்டும் வகையில், வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார் வெகுமதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி, செல்போனை கண்டெடுத்து நேர்மையாக நடந்து கொண்ட கமலாவுக்கு வெகுமதி அளித்ததோடு கறி விருந்தளித்து உற்சாகப்படுத்தினார்.