வாடகை வீடு கேட்கும் கொள்ளை தம்பதி - தேடப்பட்ட பெண் கைது
போரூர் அருகே வீடு வாடகை கேட்பது போல் கொள்ளையடிக்க முயற்சித்த தம்பதியினரில், தேடப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம், முத்துமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா (56). கடந்த 18ம் தேதி இவரது வீட்டை வாடகைக்கு கேட்பது போல் ஒரு தம்பதியினர் வந்தனர். அவர்கள் நிர்மலாவை கத்தியால் குத்தி, கொள்ளை அடிக்க முயன்றனர். பொதுமக்கள் அங்கு திரண்டதால், அந்தத் தம்பதியினர் தப்பி ஓட முயன்றனர். அதில் தட்சிணாமூர்த்தி என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து மாங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவருடன் வந்த பெண் தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர், தப்பி ஓடிய பெண்ணை தீவிரமாக தேடிவந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் அப்பெண் பதிவாகியிருந்தார். அதைக்கொண்டு தேடி வந்த காவல்துறையினர், இன்று அப்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் அவர் சைதாப்பேட்டையை சேர்ந்த அமுதா (36) என்பது தெரியவந்தது.