சென்னையில் பெரும் தீ விபத்து - 200க்கும் மேலான கார்கள் சேதம்
சென்னை போரூர் அருகே உள்ள தனியார் கார் குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன.
சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் கார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கார் குடோனின் அருகாமையில் இருந்த குப்பைக்கிடங்கில் தீப்பற்றி, பின்னர் அது கார் குடோனிற்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் கார் குடோனின் காலியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கார்கள் எரியும் பகுதியை சுற்றி பெருமளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் குவிந்து காணப்படுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பெங்களூரு விமானப் படைத்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், தற்போது சென்னையில் அதேபோன்ற தீவிபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.