சென்னை: ஊரடங்கு ரோந்து பணியில் இருந்த காவலருக்கு கொரோனா தொற்று!
சென்னை ஆலந்தூரில் உள்ள காவல்துறையினருக்கான குடியிருப்பில் வசித்து வரும் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உள்ளது. ஒரே நாளில் 82 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 26.6ஆக உள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.1ஆக இருக்கிறது. இந்நிலையில் சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனைகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள காவல்துறையினருக்கான குடியிருப்பில் வசித்து வரும் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் Pcr சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,தற்போது அவருக்கு உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் அதிகாரியுடன் பணிபுரிந்தோரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான காவல்துறை அதிகாரி, பாரிமுனை பகுதியில் ஊரடங்கு நேரத்தில் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.