‘வாடகை வாங்காமல், உணவளித்த காவலர்’ - கையெடுத்துக் கும்பிட்ட வடமாநிலத்தவர்கள்..!
சென்னையில் தனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த வடமாநிலத்தவர்களை ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் கவனித்த விதம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ரஞ்சித் குமார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். சென்னை திருவான்மியூர் எல்பி ரோட்டில் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் காலியாக இருந்த 2 அறைகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் வாடகைக்கு வந்தனர். கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தில் அந்த 5 பேரும் சிக்கிக்கொண்டனர். அத்துடன் வேலையும் இன்றி, உணவும் இன்றி தவித்து வந்தனர்.
அவர்களுக்கு உதவ முன்வந்த ரஞ்சித், தனது சொந்த செலவில் 5 பேருக்கும் 3 வேளை உணவளித்து வந்தார். அத்துடன் கடந்த 3 மாதங்களாக வீட்டு வாடகையும் வாங்கவில்லை. மேலும், தனது காவல்நிலையத்தின் உதவியுடன் அந்த 5 பேரையும் சொந்த ஊரான பீகாருக்கு ரயிலில் செல்வதற்காக ஏற்பாடுகளையும் செய்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேருக்கும் ரயில் கிடைத்துவிட, அவர்களை ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பினார். இதற்கெல்லாம் மேலாக அவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்கள் மற்றும் பணம் ரூ.7,500 பணத்தையும் செலவுக்குக் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த 5 பேரும் ரஞ்சித் குமாரைக் கைகூப்பி கண்ணீருடன் நன்றி தெரிவித்தபடி ரயில் ஏறிச் சென்றனர்.
தான் செய்த உதவி தொடர்பாகப் பேசிய ரஞ்சித், தான் ஊர்க்காவல் படையிலிருந்தாலும் தனியாக செக்யூரிட்டி நிறுவனமும் நடத்துவதாகத் தெரிவித்தார். அதில் வந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்கு உதவியதாகவும், ஊரில் தனக்கு விவசாய தொழில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதன்மூலம் வந்த அரிசி, பருப்பு போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்து உதவியாகக் கூறினார். தனது தாய் அவர்களுக்கு முடிந்தவரை உணவளித்ததாகவும், அவர்களுக்கு உதவி செய்தது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் நெகிழ்ச்சியடைந்தார். இவரது மனித நேயத்தை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.