3 மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய நபர் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
சென்னையில் 3 மணி நேரத்தில் 18 செல்போன்களை பறித்துச் சென்ற திருடனை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை பார்க் ஓட்டல் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனை திருடிச் சென்றுள்ளனர். உடனடியாக சாலையில் இருந்தவர்கள் திருடர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வேகமாக சென்ற திருடர்களை பிடிக்க முடியவில்லை.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர், தன்னுடைய காரை திருடர்கள் சென்ற பைக்கிற்கு முன்னதாக வழிமறித்து நிறுத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறியபோது ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும் திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை மூன்று மணி நேரத்தில் 18 செல்போன்களை அவர்கள் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விலை அதிகமான செல்போன்களை திருடி அதனை குறைந்த விலைக்கு விற்று சொகுசாக வாழ்ந்து வந்ததுள்ளனர். மேலும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி செல்போன் திருட்டுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். ஒருநபர் மட்டுமே கைதான நிலையில் தப்பிச்சென்ற மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான பாலாஜி ஐந்து வருடத்திற்கு முன்பு செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.