"அன்புள்ள அப்பா" - காவல்துறை சார்பில் கடிதப் போட்டி
தந்தையர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள், தந்தைக்கு ‘அன்புள்ள அப்பா’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் நூதன போட்டியைச் சென்னை காவல்துறை நடத்துகிறது. கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக இந்தப் போட்டி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 21ம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு "அன்புள்ள அப்பா" என்ற பெயரில் சென்னை காவல்துறை மற்றும் கோடாக் மஹிந்திரா இணைந்து போட்டி ஒன்றை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்த வைரசானது 55 வயதுக்கு மேல் உள்ளவர்களை அதிகமாகத் தாக்கி வருகிறது. இதனால் தமிழக அரசு, சுகாதாரத்துறை, மாநகராட்சி, காவல்துறை என மூன்று தரப்பினரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் நாளை தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை காவல்துறை இறங்கியுள்ளது.
அதன்படி ‘‘அன்புள்ள அப்பா’’ என்ற பெயரில் சென்னை பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு காவல்துறை மற்றும் கோடாக் மகிந்திரா வங்கியுடன் இணைந்து பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தப் போட்டியை நடத்துகின்றனர். 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தப்போட்டியில் பங்கு பெறலாம்.
குறிப்பாக நாளை தந்தையர் தினத்தன்று பிள்ளைகள் அனைவரும் தங்களது தந்தையிடம் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்த வேண்டும் எனவும், குறிப்பாக கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மிகவும் கவனமாகப் பாதுகாப்பு இருக்க வலியுறுத்த வேண்டும் என்பதை மையமாக வைத்துச் செயல்படவேண்டும் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா நோய் பரவாமல் இருக்க தங்களது தந்தை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் கடிதமாக எழுதி அதனை
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdC1uLF37AvoXRiqh0oRr_cYTDmPBTtJszXXBj6mS52uALArQ/viewform?usp=sf_link
என்ற லிங்க் மூலம் காவல்துறைக்குப் பகிர வேண்டும். அதில் சிறந்த கடிதத்தைத் தேர்வு செய்து அதன் நகலை அதனை எழுதிய குழந்தையின் பெயரோடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பங்குபெறும் அனைவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தக் கடிதங்களை வருகிற 30ம் தேதிக்குள் பகிர வேண்டும் எனச் சென்னை பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.