வீட்டிற்கு வெளியே கேமரா பொருத்துங்கள்: சென்னை வாசிகளுக்கு ஆணையர் வேண்டுகோள்
சென்னையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவரவர் வீட்டுக்கு வெளியே பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
சாலை விதிகளை மீறுவோரிடம் இருந்து இணையதளம் மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய திட்டத்தை சென்னை போக்குவரத்துக் கழகம் கொண்டு வர உள்ளது. இதேபோல், சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதையும் காவல்துறை வலியுறுத்தி வருகிறது.
இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை ஏ.கே.விஸ்வநாதன் இன்று சென்னையில் வெளியிட்டார். இந்த நிகழ்வில், குறும்படத்தில் நடித்த நடிகர் விவேக், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஏ.கே.விஸ்வநாதன், வீடுதோறும் சென்று கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி மக்களிடம் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்த குறும்படத்தில் ஊதியம் பெறாமல் நடித்து கொடுத்த நடிகர் விவேக் மற்றும் குழுவினரையும் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.