காவலரை நோக்கி சுட்ட ‘துப்பாக்கி’ ராமநாதன் - செங்குன்றத்தில் பரபரப்பு
சென்னை அருகே காவலரை துப்பாக்கியால் சுட முயன்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் வெற்றிவேல் என்பவர் சென்னையை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகர் மார்கெட் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த நபர் ஒருவர் தங்கள் இடத்தில் ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவலரை நோக்கி குறி வைத்து பின்னர், தரையில் சுட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர் வெற்றிவேல், செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் காவல்துறையினர் வருவதற்குள், அந்த நபர் காரில் தப்பிச் சென்றுவிட்டார்.
காவல்துறையினரின் விசாரணையில் துப்பாக்கியால் காவலரை சுட முயன்றவர் ராமநாதன் என்பது தெரியவந்தது. மொண்டியம்மன் நகரில் இருந்த அவரை செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ராமநாதன், துப்பாக்கி ராமநாதன் என்று அழைக்கப்படுவது தெரியவந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் தன்னுடயை கார் சிக்கிய போது, வழிவிடவில்லை என்பதற்காக ராமநாதன் துப்பாக்கி எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அப்போது முதல் ராமநாதன், துப்பாக்கி ராமநாதன் என அழைக்கப்பட்டார். இதுதொடர்பாக அப்போது ராமநாதன் கைது செய்யப்பட்டார்.
இதேபோல, 2011ஆம் ஆண்டு பொன்னேரியில் உள்ள கிடங்கில் 7 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கிய வழக்கில் ராமநாதன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இது மட்டுமல்லாமல் ராமநாதன் செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திர காவல்துறையினரால் தேடப்படும் நபராக உள்ளார். ராமநாதன் வைத்துள்ள துப்பாக்கிக்கான உரிமம் மணிப்பூர் மாநிலத்தில் பெறப்பட்டது என்றும், அந்த உரிமம் இங்கு செல்லுமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படும் நிலையில், ராமநாதன் துப்பாக்கி வைத்துக் கொண்டு மிரட்டுகிறார் என்று புகார் எழுந்துள்ளதால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.