பூந்தமல்லியில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்ததாக வதந்தி: இருவர் கைது!!
சென்னை பூந்தமல்லி பொது சுகாதார மையத்தில் கொரோனா பாதிப்பால் 12 பேர் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் இது குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் செய்தி பரவியது. அந்த செய்தியோடு ஒரு செல்போன் எண்ணும் இருந்தது.
இந்த தகவல் வேகமாக பரவி வந்த நிலையில் இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அந்த தகவலில் இருந்த செல்போன் நம்பரை வைத்து விசாரணை செய்தபோது அது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார் மற்றும் மலையம்பாக்கத்தை சேர்ந்த பெஞ்ஜமின் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சிவகுமார், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், பெஞ்ஜமின் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்ததும் தெரியவந்துள்ளது.
சிவகுமார் பணிபுரியும் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதால் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தெரியவந்தது இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சக நண்பருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பிய ஐயப்பன், ராஜ்குமார் ஆகிய இருவரை விராலிமலை போலீசார் கைது செய்தனர்.