“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு மக்களே காரணம்” - சென்னை ஆணையர்
மூன்றாம் கண் திட்டம் எனப்படும் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் வெற்றிபெற்றதற்கு மக்கள்தான் காரணம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி விருகம்பாக்கத்தில் புதிதாக பொருப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் கேமராக்களை தொடங்கிவைத்த இந்நிகழ்ச்சியில், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி, தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் மற்றும் இளங்கோ நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “140 கண்காணிப்பு கேமராக்கள் விருகம்பாக்கம் இளங்கோ நகர், கண்பத் ராஜ் நகரில் பொதுமக்களே பொருத்தியுள்ளனர். இது சந்தோஷமான விஷயம். இந்தப் பகுதியில் அமைதியையும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் உதவும். 2017ம் ஆண்டில் விருகம்பாக்கம் பகுதியில் நகைபறிப்பு சம்பவங்கள் 12 நடந்துள்ளது. ஆனால் இந்தாண்டு விருகம்பாக்கம் பகுதியில் 6 நகை பறிப்பு சம்பவங்களே நடந்துள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மிகவும் உதவுகிறது. குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருப்பது பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும். பாதுகாப்பான உணர்வை கொடுக்கும். மூன்றாம் கண் திட்டம் வெற்றிக்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்புதான். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் காவல்துறை செயல்பட முடியாது. வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும் சிசிடிவி வைக்க வேண்டும். நாங்கள் மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.