மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்: வாய்த்தகராறு கொலையில் முடிந்தது
சென்னை ஆவடியில் பெயிண்டிங் பணியின்போது ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக மதுபோதையில் நண்பரை வெட்டிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சீரஞ்சீவி. பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சீரஞ்சீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆவடி காவல் உதவி ஆணையர் ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். சீரஞ்சீவிக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தகராறு இருந்தது தெரியவந்தது.
இச்சம்பவத்திற்கு பிறகு சந்தோஷ் மற்றும் திருப்பதி அப்பகுதியில் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சந்தோஷை தேடி வந்தனர். இந்நிலையில் அன்னனூர் ரயில் நிலையம் பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷின் நண்பர்களான திருப்பதி,மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
சந்தோஷ், திருப்பதி, மணிகண்டன், சீரஞ்சீவி ஆகியோர் ஒரே இடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளனர். சீரஞ்சீவிக்கும், சந்தோஷுக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 16ஆம் தேதியும் பணியின் போது இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பணி முடிந்ததும் சீரஞ்சீவி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் மது அருந்திய நிலையில் சந்தோஷ், திருப்பதி, மணிகண்டன் ஆகியோர் சீரஞ்சீவியை வழிமறித்துள்ளனர். குடிபோதையில் மூவரும் சீரஞ்சீவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீரஞ்சீவை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் திருமுல்லைவாயல் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் மணிகண்டன் மீது 6 கொலை வழக்குகள் உள்ளதாகவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள சந்தோஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.