வடகிழக்கு பருவ மழையால் சென்னை மட்டுமில்லாமல், புறநகர் பகுதி மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகினர்.
சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால், படகு மூலம் மக்கள் வெளியேறினர். வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அஞ்சித் தவித்த நிலையில், மீன்வளத்துறையினர் அளித்த இரு படகுகள் அவர்களை தக்க சமயத்தில் காப்பாற்றின. தாம்பரம் அருகில் உள்ள மற்றொரு பகுதியான சிட்லபாக்கமும் கனமழைக்கு தப்பவில்லை. சாலைகள் ஆறுகள் போல மாறிவிட்ட நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டதால், பல பகுதிகள் இருளில் மூழ்கின.
இதேபோன்று சென்னையை அடுத்த பொழிச்சலூரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், தற்போது தேங்கி கிடக்கும் மழைநீரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.