திடீரென கேட்ட அழுகுரல்.. குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தை! நடந்தது என்ன?
சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் சென்று பார்த்துள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் ஒருமாத பெண் குழந்தை கிடந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது, ஒரு வயதான பெண்ணும் அவருடம் இளம்பெண்ணும் வந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.