எண்ணெய் கசிவு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
எண்ணூர் அருகே இரண்டு கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சென்னையை ஒட்டிய கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த கப்பல் நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு பெறப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். கடல் பகுதியில் இதுபோன்ற விபத்து ஏற்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகவும் எனவே மத்திய அரசு இதன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த பசுமைத் தீர்ப்பாயம், வழக்கை டெல்லியில் விசாரிப்பதா அல்லது சென்னையில் விசாரிப்பதா என்பதும் நாளை முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.