ராம்குமார் மரண வழக்கு.. தந்தையின் மனு தள்ளுபடி!
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்ததற்கு எதிரான மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016இல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையில் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், காவல் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்ற முடிவுக்குவந்து, வழக்கை முடித்துவைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரின் தந்தை, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், காவல் துறை மற்றும் மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும் கூறி, ராம்குமாரின் தந்தை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

