சென்னை | பொய் விளம்பரம்... நம்பவைத்து நூதன மோசடி – தம்பதியர் மீது காவல் ஆணையரகத்தில் புகார்
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னையில் பெரம்பூர், கேளம்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 20க்கு மேற்பட்டோர் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்று அளித்தனர். அதில், கேளம்பாக்கம் பகுதியில் இன்ஃபினிட்டி ஹோம் அப்ளையன்ஸ், மற்றும் குன்றத்தூரில் ஸ்மார்ட் மொபைல் கடையை நடத்தி வரும் கவிதா மற்றும் அவரது கணவர் யுவராஜ் ஆகியோர் லோன் வாங்கித் தருவதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளனர்
இதனை நம்பி பணம் தேவைப்படுவோர் கவிதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர், முதலில் தங்கள் ஆவணங்களை அனுப்பும்படியும், தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து சிபில் ஸ்கோர் உள்ளவர்களில் தங்களுக்கு ஏற்றார் போல், கணவன் இல்லாத பெண்கள் குடும்ப பின்புலம் இல்லாதவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவசர கடன் தேவைப்படுவோரை தொடர்புகொண்ட கவிதா, யுவராஜ் தம்பதியினர், தாங்கள் ஹோம் அப்ளையன்சஸ் கடை நடத்தி வருவதாகவும் அந்தக் கடையை பெரிதாக்கப் போவதாகக் கூறி தங்கள் ஆவணங்கள் மூலம் பொருட்களை எடுத்து தரும்படியும் அதில் வரும் லாபத்தில் 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறிய இவர்கள், தாங்கள் நடத்தும் கடையில் பார்ட்னராக இணைத்துக் கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதனை நம்பிய பலர், தங்கள் ஆவணங்கள் மூலம் டிவி, வாஷிங் மெஷின், ஏசி, வங்கிகளில் கடன் எடுத்து கொடுத்துள்ளனர். நம்பிக்கையானவர்கள் என எண்ணி தங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் இவர்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர். இரண்டு மாதங்கள் கழிந்த பின்பு கவிதா யுவராஜ் ஆகியோர் இஎம்ஐ கட்டாததை அறிந்த வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் என்ன ஓடியா விட்டோம், என அலட்சியமாக பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை மாற்றி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இவர்களை நல்லவர்கள் என நம்பிய பல பேரை இணைத்து விட்டு பல லட்சம் பணத்தை இழந்து, வங்கிக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் மோசடி தம்பதியை கைது செய்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.