விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மொபினா இந்த ஆண்டின் மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூகத்தில் சக மனிதர்களுக்கு கிடைக்கும் குடும்ப வாழ்வியல் திருநங்கைகளுக்கு இன்றும் எட்டாக் கனி தான். தினசரி வாழ்வில் பல சங்கடங்களை சந்தித்து வரும் திருநங்கைகள் மகாபாரத இதிகாச கதையில் வரும் அரவானைத் தான் தங்களது கணவனாக பாவித்து வாழ்ந்து வருகின்றனர். இதற்காகவே ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் அவர்கள் ஒன்று சேருகின்றனர். ஆண்டுதோறும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் விழுப்புரம் வருகின்றனர்.
ஓராண்டுகளாக அனுபவித்த துயரங்களுக்கு இந்தத் திருவிழா தான் அவர்களுக்கு மருந்திட்டு வருகிறது. ஆடை ஆலங்காரப் போட்டி, அழகிப் போட்டி என வண்ணமயமாக திருவிழாவை தொடங்கும் திருநங்கைகள், இன்று அரவானை கணவனாக ஏற்றுக் கொள்வதற்காக கோயில் பூசாரியின் கைகளால் தாலிக் கட்டிக் கொள்கின்றனர். இதற்காக மணப் பெண்களை போல திருநங்கைகள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். நாளை அரவான் பலியிடப்பட்ட சோகத்தை அனுசரிக்கும் வகையில் திருநங்கைகள் மணப் பெண் வேடத்தை கலைந்து விதவை கோலத்துக்கு மாறுகின்றனர்.
மகாபாரத இதிகாசக் கதையின் பின்னணியில் இந்த விழா நடைபெறும். அதே சமயம் திருநங்கைகள் ஒன்றுகூடுதலுக்கும், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பரிமாறிக் கொள்வதற்கும், இந்த திருவிழா உதவுகிறது. திருநங்கைகளிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு மிஸ் கூவாகம் பட்டமும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அழகிப் போட்டி பரதநாட்டியத்துடன் நேற்றிரவு தொடங்கி நடந்தது. காலை முதல் தேர்வு செய்யப்பட்ட 26 அழகிகள் பங்கேற்ற இறுதிப் போட்டி இரவு நடைபெற்றது. அதில் தனித்திறன், அழகு, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்த ஆண்டின் மிஸ் கூவாகமாக சென்னையைச் சேர்ந்த மொபினா முதலிடத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை சென்னையின் ப்ரீத்தியும், மூன்றாம் இடத்தை ஈரோடு சுபஸ்ரீயும் பிடித்தனர். மிஸ் கூவாகம் இறுதிச் சுற்றுப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.