சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 10ரூபாய்க்கு ‘கேப்’ வசதி புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் மக்கள் வருகையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஊபர், ஓலா போன்ற கேப் வசதியை ஆரம்பித்துள்ளது. இந்த வசதியை சென்னை மெட்ரோ பெங்களூரு மெகாகேப்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது. மேலும் இந்த வசதியை பயன்படுத்த ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர்.
அதன்படி மக்கள் இந்தச் செயலியில் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு அருகிலுள்ள நிறுத்துமிடத்தை தேர்வு செய்யலாம். பின்னர் அவர்கள் இறங்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இந்தக் கேப் வந்து அழைத்து செல்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இடங்கள் நிறுத்துமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவை 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இந்தச் சேவையை நேற்று நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சண்முகம் தொடங்கிவைத்தார். மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த வசதியின் மூலம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.