மக்களின் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ இ-பைக் சேவை!
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்திய மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கிண்டி, ஆலந்தூர் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் சுமார் 20 VOGO நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. அடிப்படை புக்கிங் கட்டணமாக வெறும் 20 ரூபாயை செலுத்தி இந்த மின்சார இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சுற்றலாம்.1 கிமீ பயணத்திற்கு 4 ரூபாய் என்ற விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
VOGO என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுநர் உரிமத்தை பதிவு செய்து, ஒரு செல்ஃபியை தட்டி விட்டு, வாகனத்தின் QR கோடை ஸ்கேன் செய்தால் போதும் வாகனம் புக் ஆகி விடும். இருசக்கர வாகனத்திற்கு அத்தியாவசியமான ஹெல்மெட்டும் பயணிகளுக்கு வாகனத்துடன் வழங்கப்படுகிறது. மெட்ரோ பயணிகளை வெகுவாக ஈர்த்து வரும் இந்த மின்சார வாகன சேவை இன்னும் முழுமையாக சென்றடைய வேண்டிய நிலையில் உள்ளது.
10 மணி நேரத்திற்கும் மேல் பயன்படுத்தும் போது 1 மணி நேரத்திற்கு 36 ரூபாய் கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது. PAYTM மூலமாக இதற்கான கட்டணத்தை செயலியில் செலுத்தலாம். தற்போது இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே அமலில் உள்ள இந்த திட்டம், மக்களின் வரவேற்பை பொறுத்து அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு அறவே இல்லாத இந்த மின்சார வாகனத்தின் பயன்பாடு காலத்தின் கட்டாயமாக உருவெடுத்துள்ளது.