தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 28இல் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் 25இல் தொடங்கியிருக்கிறது. தென்மேற்கு பருவமழை இயல்பான 34செ.மீட்டரை விட 42 செ.மீ பெய்துள்ளதாகவும், இது 23% அதிகம் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால் வடகிழக்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.