chennai mayor
chennai mayorpt desk

“திமுகவின் சமூகநீதிக் கொள்கையை பிரதிபலிக்கிறது மாமன்னன்” - சென்னை மேயர் பிரியா

“திமுக வலியுறுத்தும் சமூகநீதி கொள்கையை தான் மாமன்னன் வலியுறுத்துகிறது. கட்சியில் இதுவரை ஏற்றத் தாழ்வை நான் சந்திக்கவில்லை” என சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.
Published on

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல அரசு தரப்பில் 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5,200 மாணவ மாணவிகளை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது அரசு.

இந்நிலையில் முதற்கட்டமாக இன்று 521 மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை ரிப்பன் மாளிகையில் மாணவர்களின் கல்விச் சுற்றுலாவை மேயர் பிரியா துவங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. மிகவும் சேதாரம் அடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு, அவற்றை சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும். மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

தாமதமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததார்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும், பின்னர் அபராதம் விதிக்கப்படும். தூர்வாரும் பணிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

மாமன்னன் போஸ்டர்
மாமன்னன் போஸ்டர்

திமுக கடைப்பிடிக்கும் சமூகநீதிக் கொள்கை தான் மாமன்னன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளில் உள்ளனர். கட்சியில் இதுவரை நான் ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டதில்லை. திமுகவில் ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com