வங்கக்கடலில் "பெய்ட்டி" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘பெய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையின் தென் கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றும் நாளையும் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக நாளை மறுநாள் வரை தமிழகத்தின் வடக்கு பகுதி மற்றும் புதுச்சேரி, ஆந்திர மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னையின் பல்வேறு பகுதியில் இன்று இரவு வரை பலத்த காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புயல், கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.