ஆவின் பால் பண்ணையில் பலருக்கு கொரோனாவா? - நிறுவனம் விளக்கம்
சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உள்ளதாக பரவும் செய்தி பொய்யானது என்று ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆவின் மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் 300 பேரில் 10 பேருக்கும் குறைவானோருக்கே நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளதாகவும், ஆப்பரேட்டர் ஒருவர் மட்டும் ஒரு மாதத்துக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் போட்டியாளர் மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் சமூக விரோதிகளால், தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா என முற்றிலும் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும் இந்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆவின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, சென்னை அருகே திருவேற்காட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஆவின் நிறுவனம் சார்பில் தடையின்றி பால் வினியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, தெரிவித்தார்.