கடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்

கடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்

கடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்
Published on

 சென்னையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு நிதி நிறுவன உரிமையாளர் கடத்தப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் மோகன்.இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வடபழனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வங்கியில் கடன் பெற்று தரும் முகவர் சரவணன் என்பவர் ஒரு மாதத்துக்கு முன்பு மோகனுக்கு அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு 20 லட்சம் ரூபாய் கடன் தேவை என்று மோகனிடம் கூறியுள்ளார் சரவணன். நிறுவனத்தை நேரில் பார்த்துவிட்டு கடன் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பிய மோகனும் தனது உறவினர் மாணிக்கத்துடன் கடந்த 23-ம் தேதி கடன் கேட்ட நிறுவனத்தை பார்க்கச் சென்றுள்ளார்.

மோகன் மற்றும் அவரது உறவினரை தான் ஏற்பாடு செய்த காரிலேயே சரவணன் அழைத்துச் சென்றுள்ளார். பழைய மகாலிபுரம் சாலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தாம்பரம் நோக்கி திரும்பியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மோகன் ஏன் வேறு பாதையில் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அவரது கேள்விக்கு தனது கையால் பதில் கூறியுள்ளார் சரவணன். மோகன் மற்றும் அவரது உறவினர் மாணிக்கத்தை ‌சரவணன் அடித்து உதைத்துள்ளார். கார் சேலையூர் சென்ற போது சரவணனின் கூட்டாளிகள் 3 பேர் அதில் ஏறியுள்ளனர். 4 பேரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மோகனை மிரட்டியுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்று அவர் கூறியுள்ளார். 

பின்னர் பிணைத் தொகை 50 லட்சமாக குறைந்துள்ளது. இறுதியில் 33 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ‌என்று முடிவு செய்யப்பட்டது. சரவணன் தான் அனுப்பும் நபரிடம் கோயம்பேட்டில் வைத்து பணத்தை தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அவர் அனுப்பிய நபரிடம் பணம் கொடுக்கப்பட்டது. பணம் கைக்கு வந்த பின்னரும் கூட சரவணன் இருவரையும் விடுவிக்கவில்லை. மோகன் மற்றும் மாணிக்கம் ஆகியோர் அணிந்திருந்த 28 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறித்த கடத்தல் கும்பல் அவர்களை மப்பேடு என்னுமிடத்தில் கண்ணை கட்டி இறக்கி‌விட்டுள்ளது. இறக்கிவிடும் போது மோகன் மற்றும் மாணிக்கத்திடம் 600 ரூபாய் பணத்தை கொடுத்துச் சென்றுள்ளது ‌கடத்தல் கும்பல். 

இதுகுறித்து மோகன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது மோகன் மற்றும் மாணிக்கம் கடத்தப்பட்ட காரின் பதிவெண் போலி என்பது தெரியவந்தது. கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com