கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்: அதன் வரலாறு என்ன ?

கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்: அதன் வரலாறு என்ன ?

கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்: அதன் வரலாறு என்ன ?
Published on

கொரோனா அச்சம் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கலைவாணர் அரங்கம் குறித்து தெரிந்துக்கொள்வோம்

1952 ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையாக திகழ்ந்த இந்த அரங்கம் 65 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த அரிய வாய்ப்பை பெறுகிறது.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் அதிகளவு இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 1952ஆம் ஆண்டு சட்டப்பேரவை அரங்கம் ஒன்று வாலாஜா சாலையில் கட்டப்பட்டது. 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை அப்போதைய ஆளுநர் பிரகாசா 1952ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

ஆனால் 1956 இல் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்ததால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் சட்டப்பேரவை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது. இதன்பின் மிகக் குறைந்த செலவில் திரைப்படங்களை காட்டும் திரையரங்காக இக்கட்டடம் மாற்றப்பட்டது.

1974இல் இக்கட்டடம் ஆயிரம் இருக்கைகள் கொண்ட பிரமாண்டமான கலையரங்கமாக மாற்றப்பட்டு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் என சென்னை மக்களை மகிழ்விக்கும் இடமாக கலைவாணர் அரங்கம் திகழ்ந்தது.

இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அதிநவீன வசதிகளுடன் எழுப்பப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் ஒரு முறை சட்டப்பேரவை அரங்கம் என்ற பெரும் கவுரவத்தை இந்த கட்டடம் பெற்றுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com