சென்னையில் சாதாரண மழைக்கே தேங்கும் நீர்.. பருவமழைக்கு எந்த அளவுக்கு தயார்? அச்சத்தில் மக்கள்..!
சென்னையில் பெய்த சாதாரண மழைக்கே பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. இந்த சூழலில், வடகிழக்கு பருவமழையின் போது, சென்னையின் நிலைமை என்னவாகும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் பெய்த சாதாரண மழைக்கே பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. இந்த சூழலில், வடகிழக்கு பருவமழையின் போது, சென்னையின் நிலைமை என்னவாகும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர். குளம் போல தேங்கிய மழைநீர்... வெள்ளாக்காடான சாலைகள்.. குண்டும், குழியுமான சாலைகளில் தேங்கிய தண்ணீர்.. பிரதான சாலைகளில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. பருவமழை இல்லாமல், சாதாரண மழைக்காலத்தில் இதுதான் சென்னையின் நிலை..
பொதுவாக மழையை கண்டால் பலரும் உற்சாகம் அடைவார்கள். ஆனால், சென்னைவாசிகளின் நிலைமையோ வேறு. மழை என்றாலே, எங்கே தண்ணீர் தேங்கும், வாகனத்தில் செல்ல முடியுமா, எந்த வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என திக்.. திக்.. மன நிலைக்கு மாறிவிடுவார்கள்.. கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழைதான், பருவமழைக்கு முன்னதாகவே சென்னைவாசிகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மழையால் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடானதுதான் காரணம். சென்னை பெருங்குடி உலக வர்த்தக மையம் எதிரே உள்ள சாலையில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மெட்ரோ பணிகள் காரணமாகவும், சாலைகள் சேதமடைந்திருப்பதாலும், இப்பகுதியில் மழைநீர் தேங்குவது வழக்கமாகியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
பல்லாவரம், பான்ட்ஸ் மேம்பாலம், பம்மல் கிருஷ்ணா நகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வட பழனியில் மழை நீர் விட்ட பிறகும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, குமரன் காலனி 2ஆவது மற்றும் 3ஆவது தெருக்களில் கடந்த இரண்டு நாட்களாகவே கழிவு நீருடன் கலந்து மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆங்காங்கே தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பழுது, புதிதாக நடைபெற்று வடிகால் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை உள்ளிட்ட பிரச்னைகளால் முன்பு போல சென்னை தத்தளித்து விடுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு, சென்னை மாநகராட்சி குறைந்தது, 300 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறது.
இவ்வளவு கோடி ரூபாயில் பணிகள் நடந்தாலும், ஒவ்வொரு பருவமழைக்கும் சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் மக்கள் வெள்ளத்தில், ஒருவாரம் வரை சிக்கி தவிக்கின்றனர்.தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சென்னையில் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி வேகப்படுத்த வேண்டும் என்பதே சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது..