வங்கிக் கொள்ளையனை பிடித்த இளைஞர்களுக்கு பரிசு!
சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட திருடனை விரட்டிப்பிடித்த இளைஞருக்கு வங்கி சார்பில் ரூ.50 ஆயிரம் பரிசு
வழங்கப்பட்டது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வங்கியின் மேலாளர் அறைக்குச் சென்ற நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியைக் காட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். துப்பாக்கி முனையில் காசாளரிடம் இருந்து ரூ.6.35 லட்சம் பணத்தை திருடிய அவர், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அந்தக் கொள்ளையனை, வங்கியின் வாடிக்கையாளரான மோகன்ராஜ் இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்றுள்ளார். இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த கொள்ளையன் அங்கிருந்து தப்ப முயன்ற போது, ஜெயசந்திரன் என்ற இளைஞரும் கொள்ளையனை பிடிக்க உதவியுள்ளார். அதனால், அவர்கள் இருவரையும் பாராட்டும் வகையில் இந்தியன் வங்கி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தது. இதேபோல், அந்த கொள்ளையனை மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்கள் 4 பேருக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.