சென்னை | வருமான வரி சோதனை - ரூ.9.50 கோடி மதிப்புள்ள போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை ராயப்பேட்டையில் யாக்கூப் என்பவரிடமிருந்து 10கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறுவதாக வருமானவரித் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்றிரவு யாக்கூப் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாததால் கள்ள நோட்டுகள் ஏதேனும் வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகிறதா என்பதை சோதனை செய்ய என்.ஐ.ஏ-வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் அங்கு சோதனை நடத்திய போது, அதில் 50 லட்சம் ரூபாய் மட்டுமே ஒரிஜினல் நோட்டுகள் என்பதும் 9.50 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்துமே குழந்தைகள் விளையாடும் போலி நோட்டுகள் என்பதும் தெரியவநதது
இதனையடுத்து தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 50லட்ச ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து யாக்கூப்பை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீதமுள்ள 9.50 கோடி மதிப்பிலான போலி 2000 ரூபாய் நோட்டுகளை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராயப்பேட்டை போலீசார் யாக்கூப்பின் நண்பர் ரஷித் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.