சென்னை மாநகராட்சி.. பள்ளி செல்லாத 7,302 மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட கள ஆய்வில், நிதிச்சிக்கல்கள், குடும்பச்சண்டைகள் உள்ளிட்ட காரணங்களால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், சென்னை மாநகராட்சியில் உள்ள திருவான்மியூர் குப்பம், எழில் நகர், கண்ணகி நகர் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படக்கூடிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம், சுமார் 1,200 மாணவர்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளியில் இருந்து இடைநிற்றலுக்கு உள்ளாகும் நிலையில் இருந்த சுமார் 130 மாணவர்களும் கண்டறியப்பட்டு, மீண்டும் பள்ளியில் தொடர்ந்து படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் (EMIS) தரவுகளை ஆய்வு செய்தபோது, சென்னை மாநகராட்சியில் 7,302 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்தநிலையில் தான், சென்னை மாநகராட்சியில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க களப்பணியாளர்களுடன், ஆலோசனை கூட்டத்தை நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தொடங்கி வைத்தார்.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர், சென்னை மாநகராட்சியில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் என, 7,302 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் தொடர்பான பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில், கையாள வேண்டும். இந்தப் பணிக்காக தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த 96 சமூக ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் குழந்தைகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து, பள்ளியை விட்டு விலகியதற்கான காரணங்களை கண்டறிந்து ஆலோசனை வழங்குவதுடன், அவர்கள் பள்ளிக்கு மீண்டும் வருவதை உறுதி செய்யவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கான காரணங்களை கண்டறிந்து, அந்தக் குழந்தைகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம், அவர்களின் கல்வி தொடர்ச்சியை உறுதி செய்ய முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கண்டறியப்பட்ட 7,302 குழந்தைகளையும் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதை சென்னை மாநகராட்சி இலக்காக நிர்ணயித்துள்ளது.

